Thursday, April 9, 2009

உறவுகளின் உயிர் காக்கும் போராட்டம்; லண்டனில் மாணவர்கள் - டெஸ் பிறவுண் பேச்சுவார்த்தை











விமல்காந்த், சென்னை.

பிரித்தானியாவில் ஆரம்பமான தாயக உறவுகளின் உயிர்காப்பதற்கான போராட்டம் ஓய்வு ஒளிச்சலின்றி தொடர்ந்தும் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் பிரித்தானியத் தமிழ் மாணவர்கள் இன்று பிரித்தனியப் பிரதமரால் சமாதானத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. டெஸ் பிறவுண் அவர்களோடு பேச்சு நடாத்தினார்கள்.
கடும் குளிர் மழை என்று பாராமல் இருபத்திநான்கு மணிநேரமும் தொடர்ந்து பிரித்தானியப் பாராளுமன்றம் முன்பாக உள்ள திடலை நிரப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக பிரித்தானிய அரசு இச்சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. அப்பேச்சுவார்த்தையின்போது மாணவர்கள் தமது கோரிக்கைகளை திரு டெஸ் பிறவுணுக்கு எடுத்து விளக்கினார்கள். வன்னி மண்ணில் சாத்தியம் என்று நம்பப்படும் மாபெரும் மனிதப்படுகொலை பற்றிய அச்சத்தை அவரிடம் தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த திரு டெஸ் பிறவுண் பிரித்தானிய அரசும் தொடர்ந்தும் போர் நிறுத்தத்திற்கான அழைப்பை விடுப்பதாகத் தெரிவித்தார். அப்பதிலால் திருப்தி கொள்ளாத மாணவர்கள், “உங்கள் கோரிக்கைகளை தொடர்ந்தும் இலங்கை அரசு நிராகரிக்கிறது. எனவே நீங்கள் இலங்கைக்கு எதிராக என்ன காத்திரமான நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டதற்குப் பதிலளித்த திரு டெஸ் பிறவுண் தாம் இவ்விடயத்தை ஐ நா வுக்குக் கொண்டுசென்று ரஷ்யா, இந்தியா, சீனா, மற்றும் இலங்கை விடயத்தின்மேல் ஆர்வம் கொண்ட மற்றைய நாடுகளின் பிரதி நிதிகளோடும ;பேசி இவ்விடயத்தை ஐநாவின் பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு செல்வதாகக் குறிப்பிட்டார். மேலும் ஐ.நாவின் இறுக்கமான விதிகளின் அடிப்படையில் இவ்விடயத்திலுள்ள சிக்கல்களையும் விளக்கினார்.
அப்படி கூறியவரிடம் “இலங்கை மீது ஏன் பொருளாதார மற்றும் இராஜீயத்தடைகளை கொண்டுவரக்கூடாது” என்று கேட்டதற்கு பதிலளித்த டெஸ் பிறவுண் அவர்கள் இது பிரித்தானியாவால் மட்டும் முடியாது. இதனை ஐரோப்பிய ஒன்றியமோ ஐ. நா.வோ தான் செய்ய முடியும் என்று கூறியவரிடம் “இந்த விடயத்தை நீங்கள் முன்னின்று பரிந்துரை செய்வதோடு, சிம்பாப்வே மீது பொருளாதாரத் தடை கொண்டு வந்தது போல் ஏன் இலங்கை மீது கொண்டுவரக்கூடாது” என்று மாணவர்கள் கேட்டனர். “சிம்பாப்வே அரசு மீது தடைகளைக் கொண்டுவர பிரித்தானிய அரசு முன்னின்றுழைத்ததல்லவா” என்று மாணவர்கள் கேட்டதற்கு திரு டெஸ் பிறவுண் எதுவித பதிலும் அளிக்கவில்லை. தொடர்ந்து மாணவர்கள் தமது இரண்டு சக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக திரு டெஸ் பிறவுணுடன் பேசினார்கள். அதற்கு பதிலளித்த திரு டெஸ் பிறவுண், “பிரித்தானியா தன்னாலான முழு முயற்சியையும் எடுக்கும் என்று கூறும்பொழுது ஏன் நீங்கள் உயிரை மாய்க்க வேண்டும் ” என்றார்.
தொடர்ந்த அந்தப்பேச்சுவார்த்தையில் திரு டெஸ்பிறவுண் “மக்களைப்பாதுகாக்க வேண்டிய விடயத்தில் அரசும் புலிகளும் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் ” என்று கூறியதோடு போர்ப்பகுதியிலிருந்து மக்களின் வெளியேற்றம் பற்றிப் பேசினார். இந்த விடயத்தின் மீது பேசிய மாணவர்கள், “மக்கள் தமது சொந்த இடத்தில் வாழ விரும்பும்போது அவர்களை ஏன் அரசுப்பகுதிகளுக்குக் கொண்டு வந்து சிறைகளிலும் தடைமுகாங்களிலும் அடைக்க நினைக்கிறீர்கள் ” என்றனர்.
அதற்குப்பதிலளித்த திரு டெஸ் பிறவுண் “இம்மக்கள் ஏலவே பத்துத் தடவைகளுக்கு மேல் இடம்பெயர்ந்து விட்டார்கள் ஆகவே மக்களைக் காப்பதற்காகவே நாங்கள் வெளியேறச் சொல்கிறோம் ” என்றார். அதற்கு பதிலளித்த மாணவர்கள் “ஒவ்வொரு நாளும் மக்கள் சிங்கள அரசால் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படுகிறார்கள் ” என்றனர். அத்தோடு வெளியேறிய மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாங்களிலிருந்து அறுபத்தைந்து இளைஞர்களை சிங்கள அரசு பலவந்தமாகத் தூக்கிச்சென்றுவிட்டதே என்று கூறியபோது திரு டெஸ் பிறவுண் இவ்விடயத்தைத் தாங்கள் நன்கு அறிந்திருப்பதாகவும், தாம் உடனுக்குடன் நம்பகமான செய்திகளைப் பெற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார். “மனிதப் படுகொலைகள் மனித அவலங்களை உலகம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிராது என்று குறிப்பிட்ட திரு டெஸ் பிறவுண் குற்றவாளிகள் நிச்சயம் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் ” என்றார்.
இந்தப்பேச்சுவார்த்தைகள் தமக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று மாணவர்கள் திரு டெஸ் பிறவுணிடம் கூறி விட்டனர். மாணவர்களை நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று கூறிய திரு டெஸ் பிறவுண் தனிப்பட்ட சில காரணங்களுக்காக தாம் உடனடியாக நடவடிக்கைளை எடுக்கமுடியாது என்றும் ஆனால் வரும் வாரத்திலிருந்து இலங்கையில் போர்நிறுத்தம் வருவதற்கு தாம் அயராது பாடுபடப் போவதாகவும் குறிப்பிட்டார். தமது கோரிக்கைகளான உடனடிப் போர்நிறுத்தம் அல்லது இலங்கை மீது கடுமையான தடைகள் என்பன நிறைவேறாததால் மாணவர்கள் தொடர்ந்தும் போராடுகின்றனர். திரு டெஸ் பிறவுணுடனான சந்திப்பில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமையை அறிந்த பிரித்தானியத் தமிழ்மக்கள் தமது போராட்டத்தை மேலும் விஸ்தரிக்கப் போவதாகக் கூறியுள்ளனர். ஏற்கனவே திட்டமிட்டப்டி வருகிற சனிக்கிழமை (11/04/2009) மிகப் பாரிய கண்டனப் பேரணி பிரித்தானிய காவல்துறையின் உத்தியோகபூர்வ அனுமதியுடன் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment