Saturday, May 2, 2009

மனித உயிர்களைக் காக்க 'இராஜதந்திர வரம்புகளை' கடந்து சென்று போரை நிறுத்துங்கள்: உலக சமூகத்திடம் பா.நடேசன் வேண்டுகோள்


Vimalkanth
"எந்த நாடுகளுக்காவது இங்கு வாழும் மக்கள் மீது அக்கறை இருக்குமானால், மனித உயிர்களைக் காப்பதற்காக, அந்த நாடுகள் தமது 'இராஜதந்திர வரம்புகளை' கடந்து சென்று சிறிலங்காவின் இன அழிப்புப் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்துலக ஊடகமான 'அசோசியட் பிறஸ்' நிறுவனத்தின் கொழும்பு செய்திப் பீட தலைமையாளர் ரவி நெஸ்மன் மேலும் எழுதியிருப்பதாவது:

"நாங்கள் சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை; அதனால், அனைத்துலக சமூகம் இந்த கொடுமையான போரை நிறுத்துவதற்கு முன்வரவேண்டும்," என நடேசன் தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்துமாறு உலக நாடுகள் போடும் இராஜதந்திர அழுத்தங்களை எல்லாம் சிறிலங்கா அரசு புறம் தள்ளிவருகின்றது.

"எந்த நாடுகளுக்காவது இங்கு வாழும் மக்கள் மீது அக்கறை இருக்குமானால், மனித உயிர்களைக் காப்பதற்காக, அந்த நாடுகள் தமது 'இராஜதந்திர வரம்புகளை' கடந்து சென்று சிறிலங்காவின் இன அழிப்புப் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்," என நடேசன் தெரிவித்தார்.

மனிதாபிமான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துதல் மற்றும் தொண்டர் அமைப்புக்களின் பணியாளர்களை போர் நடைபெறும் பகுதிக்கு அனுமதித்தல் போன்றவற்றை மேற்கொள்ளும் முகமாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர் நடேசனின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்திருந்தனர். ஆனால் சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளைச் சரணடையக் கோரியிருந்தது.

இதற்கு பதிலளித்த நடேசன், "சரணடைவது மற்றும் ஆயுதங்களைக் கீழே போடுவது என்ற கேள்விகளுக்கே இங்கு இடம் இல்லை. எமது (மக்களின்) நியாயமான அரசியல் உரிமைகளை நாம் பெறும் வரையிலும் எமது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசும், அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக தெரிவித்த கருத்துக்களை மறுத்த நடேசன், "நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தை போன்றவர்கள் யாராவது தமது குடும்ப உறுப்பினர்களையே மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவார்களா?" என கேள்வியும் எழுப்பினார்.

விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தினர் நாட்டை விட்டுச் சென்று விட்டார்கள் என்ற கருத்துக்களை மறுத்த நடேசன், தாம் எல்லோரும் நாட்டிலேயே இருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தற்போது சிறிலங்கா அரசின் பகுதியில் உள்ள தயா மாஸ்டர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக கேட்டபோது, அந்த கருத்துக்களை நிராகரித்ததுடன், அவர் தமது இயக்கத்தின் "முக்கியமான ஒரு உறுப்பினர் அல்ல" எனவும் நடேசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment