Monday, May 11, 2009

அனைத்துலக சமூகம் தவறிவிட்டதால் 10 ஆயிரம் பேர் 5 மாதத்தில் படுகொலை: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் குற்றச்சாட்டு


விமல்காந்த், சென்னை.


வன்னியில் இடம்பெறும் மனிதப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் தவறிவிட்டதால் கடந்த ஐந்து மாத காலத்தில் மட்டும் 10 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் காயமடைந்தும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழக கள அலுவலக தலைமை அதிகாரி லோறன்ஸ் கிறிஸ்ரி, தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்கு 'பாதுகாப்பதற்கான பொறுப்பு' (R2P) என்ற கோட்பாட்டைப் பயன்படுத்துமாறும் கோரியிருக்கின்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
சுமார் 1,30,000 மக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் 'பாதுகாப்பு வலயம்' என வரையறுக்கப்பட்டுள்ள பகுதி மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் தொடர்ச்சியான வான் குண்டுத்தாக்குதலையும் பலமான எறிகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டிருக்கின்றார்கள். நாள் முழுவதும் தொடர்ந்த இந்தத் தாக்குதல்களில் 3 ஆயிரத்து 200 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள அதேவேளையில், மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர்.
கனரக ஆயுதப் பாவனை இரண்டு வார காலத்துக்கு முன்பாகவே முடிவுக்கு வந்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்த போதிலும், நேற்றும் தொடர்ச்சியாக இந்த வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தி சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 3 ஆயிரத்து 200 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் தடைகளால் இப்பகுதியில் போதிய மருத்துவ வசதிகளோ, மருந்துகளோ அல்லது மருத்துவப் பணியாளர்களோ இல்லாமையால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஊடகங்களில் தெரிவிக்கப்படும் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமானவர்களே இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
தற்காலிக மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழக களப் பணியாளர்களின் தகவல்கள் என்பவற்றின் அடிப்படையிலேயே இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், தாக்குதலின் போது கொல்லப்பட்ட பலர் கடற்கரை மணலால் மூடப்பட்டுவிட்டனர்.
பெருந்தொகையானவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதால் அவர்களை மீட்கும் பணியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. உடனடியாக இந்தப் பகுதிக்கு உணவு மற்றும் மருந்துகளை அனுப்பிவைக்குமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
அதேவேளையில், இப்பகுதியில் பாரியளவிலான படுகொகைள் இடம்பெறுவதால் அனைத்துலக சமூகம் கண்காணிப்புக் குழு ஒன்றையும் அனுப்பிவைக்க வேண்டும். இந்த இனப்படுகொலையைத் தடுப்பதற்கு உலகம் உடனடியாகத் தலையிட வேண்டும்" என லோறன்ஸ் கிறிஸ்ரி அனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதேவேளையில், நேற்று இடம்பெற்ற மூர்க்கத்தனமான தாக்குதல்களில் படுகாயமடைந்து முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 24 மணிநேரம் கடந்த நிலையில் கூட சிகிச்சை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பிராந்தியப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்திருக்கின்றார்.
பெரும் தொகையான காயமடைந்தவர்கள் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதாலும் மருத்துவப் பணியாளர்கள் பலர் பணிக்கு வராமையாலுமே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.
மருத்துவப் பணியாளர்களில் குடியிருப்புக்கள் பல தாக்குதலுக்குள்ளாகியிருப்பதால் அவர்களில் 50 வீதமானவர்கள் கடமைக்குச் சமூகமளிக்க முடியாத நிலையிலிருப்பதாகவும் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

No comments:

Post a Comment