இலங்கையில் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா எமக்குப் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது. அந்த ஒத்துழைப்பு காரணமாகவே பயங்கரவாதத்தை எம்மால் இந்தளவுக்கு ஒழிக்க முடிந்துள்ளது. என சுகாதார அமைச்சரும் சபை முதல்வருமான நிமால் சிறிபால டி சில்வாவே நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்
அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கிவரும் பாரிய ஒத்துழைப்புக் காரணமாகவே புலிப் பயங்கரவாதத்தைத் தம்மால் இந்தளவுக்கு ஒழித்துக்கட்ட முடிந்துள்ளது என்று அரசு நேற்று நாடாளுமன்றில் உறுதிபடக் கூறியது. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்குத் தொடர்ந்தும் இந்தியா வழங்கிவரும் இந்த உதவிகள் அளவிட முடியாதவை என்றும் அரசு மேலும் தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுர திஸாநாயக்க இந்திய வைத்தியர்களின் வருகை தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் விசேட கூற்று ஒன்றை வெளியிட்டார். அக்கூற்றுக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சரும் சபை முதல்வருமான நிமால் சிறிபால டி சில்வாவே அப்போது இதனைக் கூறினார்.
இலங்கையில் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா எமக்குப் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது. அந்த ஒத்துழைப்பு காரணமாகவே பயங்கரவாதத்தை எம்மால் இந்தளவுக்கு ஒழிக்க முடிந்துள்ளது. அந்த ஒத்துழைப்பு எமக்குத் தொடர்ந்தும் கிடைத்து வருகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, பஸில் ராஜபக்ஷ ஆகியோர் இந்தியாவுக்கு மேற்கொண்ட இராஜதந்திர விஜயங்களின் அடிப்படையில்தான் இந்தியா இந்த உதவிகளை எமக்கு வழங்கி வருகின்றது.
அந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகத்தான் இந்தியா, வைத்தியர்களை எமக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் இராணுவ வைத்தியர்கள் அல்லர். இராணுவத்திற்குச் சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள்.
ஆனால், இந்த வைத்தியர்களின் வருகையை ஜே.வி.பியினர் எதிர்க்கின்றனர். ஜே.வி.பியின் சுவரொட்டிப் போராட்டத்தில் புதிய தொனியைச் சேர்ப்பதற்காகவே ஜே.வி.பியினர் இந்த விடயத்தைப் பெரிதாகத் தூக்கிப் பிடிக்கின்றனர்.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாது அந்த நெருப்பை அணைக்கும் நடவடிக்கையில்தான் நாம் இப்போது ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில் எமக்கு உதவி வழங்கும் நாடுகளை நாம் பகைத்துக்கொள்ள மாட்டோம்.
இந்தியா எமக்கு மருந்துப் பொருள்களையும் வழங்கியது. அவற்றை நாம் எமது சுகாதார அமைச்சின் ஊடாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விநியோகித்துள்ளோம்.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி காலத்தில் விமானம் மூலம் பருப்பு போட்டது போல் அந்நாடு இப்போது செய்யவில்லை.
இலங்கை வந்திருக்கும் இந்திய வைத்தியர்களின் திறமை தொடர்பில் நாம் திருப்தியடைகின்றோம். அவர்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களால் அமைக்கப்பட்டுள்ள புல்மோட்டை வைத்தியசாலை நிரந்தரமானதல்ல. அது நடமாடும் வைத்தியசாலை. தேவையில்லாத பட்சத்தில் அது இல்லாது செய்யப்படும்.
புல்மோட்டையில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளாலோ அல்லது இந்திய மருத்துவர்களாலோ எமது நாட்டின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படாது. இதை ஜே.வி.பி. நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது இந்தியாவின் உதவியைப் பெறுமாறு கூறிய ஜே.வி.பி. இப்போது இந்தியாவிடமிருந்து எந்த உதவிகளையும் பெறக்கூடாது என்கிறது. அக்கட்சி அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றுகின்றது.
புல்மோட்டைக்கு வந்துள்ள இந்திய மருத்துவர்கள் அங்குள்ள கணியவளங்களை எடுத்துச் செல்ல மாட்டார்கள். அவர்கள் அதற்காக வரவில்லை. மக்களுக்குச் சிகிச்சையளிக்கவே வந்துள்ளனர்.
இந்தப் புல்மோட்டை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் மாத்திரமே வழங்கப்படும். அதன்பிறகு நோயாளிகள் பதவிய, கந்தளாய் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களுக்கு அனுப்பப்படுவர்.
எமக்கு உதவி வழங்கத் தயாராகவுள்ள நாடுகளிடமிருந்து உதவியைப் பெற நாம் தயாராகவுள்ளோம். அந்த உதவிகளை நாம் நிராகரிக்க மாட்டோம்.
இது தொடர்பில் சுவிஸ், நோர்வே போன்ற நாடுகளின் தூதுவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அந்நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற நாம் தயாராகவே உள்ளோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment